Friday, November 05, 2010

இனிய தீபாவளி வாழ்த்துகள்

தேசம் விட்டு தேசம் வந்தும்
நம்மை நேசம் குறையாமல்
வாழ வைப்பது இத்தகைய திருநாளே

சர வெடியின் சத்தம் போல்
வேறொன்றும் இசை உண்டோ
இன்று மனதில் பொங்கும்
மகிழ்ச்சியை போல் வேறொன்றும்
இனிப்புண்டோ


எண்ணை குளியல் , புத்தாடை
பணியாரம் .பட்டிமன்றம்
விஷ்ணு வெடியின் மாறா வாசம்
நினைத்தாலே
ஆஹா இங்கும் நம் மண்வாசம்

இங்கு காலையில் எழுப்பி
எண்ணை வைக்க அம்மா இல்லை
புத்தாடை எடுத்து கொடுக்க அப்பா இல்லை
போட்டி போட்டு வெடி வைக்க தம்பி இல்லை
இனிப்பு கொடுக்க ஆளில்லை
தீபாவளி காசு வாங்க வாசலில் யாருமில்லை

வெடி வெடித்தால் 911 வரும்
கதவு திறந்தால் குளிர் வரும்
இருந்தாலும்
இன்று தீபாவளி , இன்று தீபாவளி
என்று மனதில் எழும் குதூகலத்திற்கு
அளவில்லை

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தேசம் விட்டு தேசம் வந்தும்
நம்மை நேசம் குறையாமல்
வாழ வைப்பது இத்தகைய திருநாளே

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Thursday, November 04, 2010

வாழ்கை பயணம்

அன்று கார்த்திகை.கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் பேருந்தில், நான் ஜன்னலோர இடத்தில் அமர்திருந்தேன் .மனதில் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் குதுகலம்.கையில் "நானும் அந்த இருட்டு மிருகமும் " என்ற மிக பயங்கரமான அட்டை படம் கொண்ட 5 ருபாய் புதினம் , இது போன்ற பயனிதிற்கு இத்தகைய புத்தகங்கள் நல்ல துணை .

பொதுவாக நான் பார்த்த பேருந்து நிலையங்களில் கும்பகோணம் பேருந்து நிலையம் , மிக சுவாரசியமான இடம் . அங்கு பங்கு சந்தை போல் ஒரு பரபரப்பு எப்பொதும் இருக்கும் .குறிப்பாக, ஒரு மூலிகை விற்பவர் வந்தார் .கிட்டதட்ட கலியுக சித்தர் அவர் .ஒரு வெள்ளை நிற முழுக்கை சட்டை , நீல நிற கால்சட்டை அதற்கு சிறிதும் ஒத்துபோகாத இளஞ்சிவப்பு கழுத்துக்குட்டை (tie ), இதுட்டன் ஒரு கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார்.

அவர் பேருந்தில் ஏறி மிக பலமாக கை தட்டினார் , ஒரு கணத்தில் சலசலப்பு அடங்கி , நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உட்பட அனைவரும் அவர் வசம் , அவர் பேச தொடங்கினார்
"
சார் , இங்க பாரு , இது பல அறிய மூலிகைகளின் கலவை . இது பல் வலி , வைத்து வலி , கண்ணு வலி , கை வலி , கால் வலி இன்னா வலி வேனுகுணா சொல்லு சார் , இத ஒரு சொட்டு போட்டாக சட்டுனு போய்டும் " என்றார்

அப்போது இது ஒரு காமெடி என்று ஒரு சிலர் முனுமுனுக்க தொடங்கினர் , அந்த நொடியில் , அந்த சித்தர் யாரும் எதிர் பார்க்காத ஒன்றை செய்தார் சட்டேன்று ஒரு நெகிழ்லி (பிளாஸ்டிக்) காகிதத்தை எடுத்தார் , அந்த மூலிகை ஒரு சொட்டு எடுத்து தெளித்தார் . அது குபுக் என்று தீ பற்றி உருகியது .அனைவரும் ''வென்று வாய் திறந்து பார்த்தோம் ."இப்ப தெரியுதா இந்த மூலிகை பவர் , நெஞ்சு சலிய இப்படி கரைச்சுடும் " என்றார் .

"
யாருகாவது பல்லு வலி இருக்கா கை தூக்கு , ஒரு சொட்டு பல்லுல போட்ட போதும் , இனிமே பல் வலியே வராது . இலவசம் " என்றார்

"
நீ மூலிகைய பல்லுல போட்டவுடனே பல்லு இருந்தாதானே வலிகர்ர்துகு " என்று ஒருவர் கருத்து தெரிவித்தார் . இருப்பினும் ஒருவர் தான் அதை முயற்சி செய்ய முன் வந்தார் , இலவசம் ஆச்சே. அவர் மீன்சுருட்டியில் (கும்பகோணத்திற்கு அடுத்த ஊர் ), நெஞ்சு எரிந்து சுருண்டு விழுந்தது வேற விஷயம்.

"
சரி சரி , நட பஸ் கிளம்புது " என்றார் நடத்துனர் .சித்தர் " 5 ரூவா சார் நீயாவது வாங்கு" என்றார், ஏக்கமாக என்னை பார்த்து . அவர் கண்களில் அவர் குடும்பத்தின் பசி தெரிந்தது அதனால் நானும் மனதுருகி உடனடியாக 100 ருபாய் எடுத்து .......என்று எல்லாம் இங்கு பகடாய் எழுத மனமில்லை . அங்கு என் இடத்திற்கு மூலைவிட்த்தில் (diagonally opposite) ஒரு பேரழகி ஓரகண்ணில் , நடப்பதை எல்லாம் கவனிப்பதை நானும் கவனித்தேன்.உடனே "மூலிகை எல்லாம் வேணாம் , இந்தா 10 ரூபா போய் சாப்பிடு . பசிய காலி பண்ண ஏதாவது முலிகை கண்டுபிடி " என்றேன் . என் துணுக்கை புரிந்தவளாய் புன்னகைத்தாள் .

பொதுவாக பேருந்து பயணங்களே மகளிர் இருக்கைகள் இருப்பதால் அழகாவதுண்டு , அதுவும் நம்மோடு சரசமாடும் (கம்பெனி கொடுக்கும் ) பெண் கிடைத்தால் ,மனதில் கவிதை மழை தான்

இதோ ஒன்று , உடனே தோன்றியது

காலியான பேருந்திலும் ,
உன் புன்னகை பார்த்தவுடன்
பூக்களின் நெரிசல்

அப்போதே மழையில்
நனைந்த அந்த பூக்கள்
மெய் சிலிர்க்க ,
பேருந்துக்குள் சோவென்று
தேன் மழை

அதிசியமாய் !!! அன்று உடனே தொடங்கியது வெளியே சாரல் .

புறப்பட்டது பேருந்து . ஜன்னலோர பயணம் , கண்களால் சரசமாடும் அழகு பெண் , 5 ருபாய் புதினம் , ஜில்லென்ற சாரல் இதை விட சிறந்த அனுபவம் உலகில் உண்டோ .என் மனதில் அளவில்லா குதுகலம் , "இது தாண்டா லைப் " என்றேன் எனக்குள் .

சில மிக மகிழ்ச்சியன மணிகளுக்கு பிறகு , தீடிரென்று அவள் செய்கையில் ஒரு முரடன் அவளை கண்களால் பார்த்து பார்த்து கொலை செய்வதை, கண்களில் பயத்துடன் எனக்கு தெரிவித்தாள்.உடனே நான் மிக பயங்கரமான கோவத்தில் அவனை பார்த்து

புலி பசித்தால் புல் திங்கட்டும்
அனால்
உன் போன்ற எருமை பூக்கள் மேய்ந்தால் ,
மின்சார வேலியாய் நான் காவல் இருப்பேன்

என்று மனதிற்குள் கவிதை பாடி , அவனை பார்த்து நானும் பயந்து கண்டும் காணமல் இருந்தேன். அவள் கேவலமாக சிரித்தாள்.அதையும் நான் கண்டும் காணமல் இருந்தேன். பேருந்தில் நான் கோதாவில் இறங்குவதில்லை என்று நீடாமங்கலம் (கும்பகோணம் அருகே ஒரு கிராமம் ) ஆஞ்சனேயரிடம் சத்தியம் செய்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

இரண்டு மணி நேரத்தில் வடலூர் வந்தது , மழை அதிகரிதுருந்தது .பேருந்தில் அனைவரும் ஜன்னல் மூடி இருந்தனர் .

இயற்கையை ரசிக்க தெரியாத மூடர்கள்
மழை
பூமியின் பஞ்சம் தீர்க்கும் உயிரூற்று
பல ஜீவ நதிகளின் ஜீவன்
உலகும் சுற்றும் வாலிபன்
உலகை காக்கும் வீரன்
அது தெருக்களை மட்டும் அல்ல
நனைந்து பார் , அதோடு இணைந்து பார்
உன் உள்ளத்தையும் சுத்தம் செய்யும்

உன் ஜன்னலை திற
உன் புழுங்கி கிடக்கும் உள்ளமும் திறக்கும்

உன் ஜன்னலை திற
இயற்கை ரசி ,பசி மட்டுமே வழக்கை இல்லை

உன் ஜன்னலை திற
....

என்று கவிதை படும் போதே சற்று என் கண்கள் அவளை தேட , பேருந்து நின்றிருந்தது , அவள் அந்த எருமையுடன் வெளியே மரவள்ளி கிழங்கு வறுவல் தின்றுகொண்டிருந்தாள்.அவன் அவள் ஆண் சிநேகிதன் போலும் .

நானும் 5 ருபாய் வறுவல் வாங்கி எதுவும் நடக்காத மாதிரி தின்றேன். பேருந்து கிளம்பியது , நான் மழை ரசிக்க தொடர்ந்தேன்.சிறிது நேரத்தில் , என் காதருகே இருமல் சப்தம் . முதலில் கவனிக்கவில்லை , திரும்ப திரும்ப அதே சத்தம். திரும்பி பார்த்தேன்

"
சார் அந்த ஜென்னல் கொஞ்சம் மூடுங்கலேன்" என்றான் அவன்

நான் அமைதியாய் இருந்தேன் , அனால் மனதிற்குள் கோபம் கொந்தளித்தது இயற்கையை ரசிக்க தெரியாத மூடன். இல்லை, நீ அதை விட கேவலம் இயற்கையை ரசிக்க கூட விடாத மூடன் என்றேன் .


அவன் மறுபடியும் "சார் , இப்ப மூட போறிங்களா இல்லியா " என்றான் கறாராக .நான் முடியாது என்றேன் .பின் இருக்கைகளில் இரண்டு அல்லகைகள் "மூடு சார் " என்றனர் .

"
இயற்கையை , ஜன்னலோரே பயணத்தை
ரசிக்க தெரியாத இந்த மனித இனம்
இனி சீக்கிரமாய் சாகும் " என்று சபித்து .மூடினேன் .

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு
-----------------------------------------
திருமணதிற்கு பிறகு , என் ஒரு வயது குழந்தையுடன் , கும்பகோணம் பயணம் .நல்ல மழை . என் அருகில் இருந்தவனிடம் "சார் அந்த ஜென்னல் கொஞ்சம் மூடுங்கலேன்" என்றேன்.
இயற்கையை ரசிக்க தெரியாத மூடன். இல்லை, நீ அதை விட கேவலம் இயற்கையை ரசிக்க கூட விடாத மூடன் என்றான் அவன் . :)